தமிழர் காசுகள்

சங்ககாலத் தமிழக நாணயவியல்

சங்ககாலத் தமிழக நாணயவியல்

தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. பண்டமாற்று முறை முடிவுக்குப்பின் சரியான மாற்றுப் பொருளாக நாணயங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். அதைக் காலப்போக்கில் மெருகேற்றி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தார்கள்.
மக்களிடையே புழங்கி வந்த நாணயங்கள், வரலாற்றுக் காலத்தை வரையறுக்க உதவும் சான்றுகள் ஆகின்றன. சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.