இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள சிவானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவன் நான். தவத்திரு விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய அப்பள்ளியில் நல்லாசிரியர்கள் பலரிடம் பாடம் கேட்டதால் இயல்பிலேயே தமிழார்வமும் இலக்கிய ஈடுபாடும் எனக்கு ஏற்பட்டது. எனினும் வாழ்க்கையோட்டத்தில் அவ்வூரிலிருந்து புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டதால், 1986 ஆம் ஆண்டில் அமைதிப் பூங்காவாகத் திகழும் கனடா தேசத்தில் புகலிட வாழ்வை மேற்கொண்டேன். இங்குள்ள பெல் கனடா (Bell Canada)எனும் நிறுவனத்தில் பணியாற்றி அண்மையில் இளைப்பாறிய பின், இல்லக் கடமைகளில் ஈடுபட்டுவருகின்றேன்.
புலம்பெயர் தேசங்களில் குடியேறினாலும் அடிப்படையில் தமிழை மறவாமல் இயன்ற பணிகளைச் செய்துவந்தேன். தமிழகத்திற்குச் சுற்றுலா செல்லும்பொழுது தகுந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆளுமைகளைச் சந்திப்பதையும், தமிழ் நூல்களை வாங்கி வருவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) பணிகளில் என்னை இணைத்துக்கொண்டு, தமிழ்த் தொண்டர்களுடன் இணைந்து என்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றேன். அதுபோல் கனடாவில் உள்ள தமிழ் இலக்கிய அமைப்புகள், மற்றும் தமிழமைப்புக்களிலும் ஆர்வத்துடன் இணைந்து நற்பணிகளுக்குத் துணையாக இருந்துவருகின்றேன்.
என் அருமை மகள் ஆர்த்தி சிவம் வேலுப்பிள்ளை - பிரசாத் இணையரின் திருமண நாளில் (20-08-2016) தமிழ்மறையாகப் போற்றப்படும் திருக்குறள் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட்டு, விருந்தினருக்கு அன்பளிப்பாக அந்த நூலினை அளித்து, திருக்குறள் பணிகளில் இணைந்தமை நினைத்து மகிழ்கின்றேன்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத் தொடக்க விழாவுக்குக் கனடா வந்தபொழுது, அவருடன் இணைந்து, தவத்திரு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்து அந்தப் படத்தை இணைத்தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி, வெளியிட்டமையும் என் நற்பணிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அத்தோடு கனடிய தமிழர் மனிதாபிமான (CTHA) அமைப்பினருடன் இணைந்து வட கிழக்கில் எம்மக்களுக்கான கல்வி, தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இலங்கையில் ஆதரவற்ற குடும்பங்கள், குழந்தைகளின் பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவரும் வேளையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். இந்தச் சூழ்நிலை சமூகப் பணிகளில் முழுதாக நான் ஈடுபடுவதற்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பெனக் கருதுகிறேன்.
பணியோய்வுக் காலத்தில் தமிழ் நூல்களைப் படிப்பதிலும், உலகத் தமிழர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது தமிழ்சார்ந்த செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்துபட்டுக் கிடப்பதை உணர்ந்தேன். இவற்றை ஓரிடத்தில் திரட்டி வழங்கினால் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் தமிழ்க் களஞ்சியம் என்ற பெயரில் ஓர் இணையதளத்தை உருவாக்கி, செய்திகளை உள்ளிடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இத் தமிழ்க் களஞ்சியம் முழுமைபெறும்பொழுது, தமிழ்த் தகவல்கள் ஒருகுடையின் கீழ் கிடைக்கும்.
தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ் மொழி குறித்த ஆவணங்கள், பண்பாட்டு ஆவணங்கள், தமிழக வரலாற்று ஆவணங்கள், வேளாண்மைச் செய்திகள், முதன்மையான இணையதளங்கள், புகைப்படங்கள், ஒளி ஆவணங்கள், நூலகங்களின் முகவரி, கல்வி நிறுவனங்கள், உலகத் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் தமிழ்க் களஞ்சியத்தின் பக்கத்திற்கு வருபவர்கள் பார்த்து - படித்தின்புற முடியும்.
சாதி, மத, இன, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, தமிழன் என்ற நினைவோடு தொடங்கியிருக்கும் என் முயற்சிக்கு உலகத் தமிழர்களின் ஒத்துழைப்பைக் கோரி நிற்கின்றேன்.
தமிழ்த்தொண்டன்
சிவம் வேலுப்பிள்ளை
தமிழ்க் களஞ்சியம் - பொறுப்பாளர்
திருக்குறள் அறக்கட்டளை
கனடா