தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள்

இன்றைய சமூகத்தேவைகளும் நாமும்.

தனிமனிதன், குடும்பம், சமூகம் இதுவே நம் வாழ்வின் படிமுறைகளாக இருப்பதனைப் பாரம்பரியமாக அறிந்து வாழ்ந்து வருகின்றோம். இந்த வகையில் பல சமூகங்களின் இணைப்புக்களே கிராமம், பட்டணம், தேசமென விரிவடைந்து செல்வதனைக் காண்கின்றோம். இந்த மக்கள் ஏதோ ஒன்றினால் பிணைப்புப் பெற்றிருப்பது இயல்பானதன்றி வேறில்லை. இதற்கு அடிப்படையாக அமைவது பேசு மொழியும், எழுத்துமே அவர்களை யாரென்று அடையாளப் படுத்துகின்றது. அதனாலேயே தான் நாம் தமிழராக அடையாளப் படுத்தப்படுகின்றோம். இதுவே அனைத்து மானிடர்கட்கும் பொருந்துவனவாகும். இதன் ஒழுங்கில் இன்று 6500 மொழிகள் வரை பேசப்படுகின்றன. பல மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லை. 2000 மொழிகளுக்கு மேல் பேசுபவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இவ்வாறு பல மொழிகளையும் பேசுகின்ற மக்கள் பல்லாயிரம் சமூகக் குழுமங்களாக இவ்வுலகில் பரந்துபட்டு வழ்ந்து கொண்டிருகின்றார்கள். இந்த வகையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகமும், தனி மனிதனும் இல்லை எனலாம். ஏன் யாவற்றையும் துறந்த தவசிகள், முனிவர்கள் காடுகளிலும் மலைகளிலும் வழுகின்றார்களே? ஏன் என்ற கேள்வியும் எழலாம். அவர்களுக்கும் இப்பிறவிப் பயனை அடைந்து இறையடி சேரவேண்டும் என்ற விருப்புண்டு, அதை ஆசை என்றும் கொள்ளலாம். நாடாளுமன்னன் தொட்டு, நாட்டுக் குடிமகன் வரை பிரச்சினைகள் உண்டு.

மனித இனம் (Homo Sapiens) தோன்றிய வரலாறு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தியதாக அறியக் கிடக்கின்றது. அதிலும் நாகரிகமடைந்த நம் தமிழர் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என்பர். கடற்கோள்களும், எரிமலைச் சீற்றங்களும், இயற்கை அழிவுகளும் நம் சரித்திர எச்சங்களை அழித்துவிட்டன என்பது பல ஆய்வாளர்கள் வாயிலாக அறிகின்றோம். நம் மூதாதையர்களின் வராலாறுகள் மிகவும் தொன்மையானதும், பெருமைக்கு உரியதும் ஆகும். இந்தப் பெருமை மட்டும் போதுமா? பழைமை பேசியே தமிழர் வாழ்வைக் கழிக்கமுடியுமா? அது பெருமைக்குரியதா? சிந்திக்க வேண்டியவர்கள் இன்று வாழ்பவர்களேயன்றி, நேற்று வரை வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் அல்ல. அவர்கள் நமக்கு நல்ல பல போதனைகளையும், நல்வழிகளையும், அற வழிகளையும், பட்டறிவினையும், நல்ல தமிழ் இலக்கியங்கள் மூலமாக நமக்காக விட்டு சென்றிருக்கின்றனர். அவற்றிலிருந்து கற்பதன் முலம் நல்லவற்றை கொண்டு சிறந்த சமுக சீர்திருத்தங்களுக்கு வழிகோல வேண்டும். இன்று நாம் காணும், நல்வழிகளும் செயற்பாடுகளும்தான் நாளைய நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் சிறந்த வழிமுறைப் பொறிமுறைகளாகும்.

இன்று நாம் வாழுவது நாகரீகமடைந்த அறிவியல் உலகம். இன்றைய உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே மனிதநேயம், அன்பு, கருணை, இரக்கம், மனித உரிமைகள் எனப் பலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இருந்தும் சில மக்கள் எவற்றையும் ஏற்காமல் வாழ்கின்றார்கள். இதையே நம் தமிழ் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் எடுத்தியம்பியுள்ளதனையும் நோக்கலாம்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" (குறள் - 391)

கற்க வேண்டியவற்றை ஐயம் திரிபற ஆழ்ந்து அலசிக்கற்க வேண்டும். அவ்வாறு கற்றவற்றை பின் நம் அன்றாட வாழ்வில் சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் கல்வியின் நோக்கத்துக்குத் திருக்குறள் அளிக்கும் விளக்கம் இது. குற்றத்தை உணர்த்தி அதனின்று நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத்தரும் கல்வி வாழ்க்கையை மேம்படுத்தும்.

பொதுமறையான திருக்குறள் கூறுவதனையே மானிடர் கற்று செயற் படுத்தினாலே மனித நேயம் மேம்படும். இவை இவ்வாறிருக்க, "உன்னைத் திருத்து உலகம் தானாகத் திருந்தும்" என்பது நம்பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம்மை நாம் சீர்படுத்திக்கொண்டால் உலகில் ஒருவர் நல்லவராகிவிடுவார் இல்லையா? அதுபோல் நம் குடும்பம், சமூகம் திருந்த உலகமும் அந்த வரிசையில் திருந்திவிடும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசா பாசங்கள் நிறைந்து இருக்கும், அது இயற்கையே. ஆசையே சுயநலத்தின் முதற் படியாகும். அது முற்றாகத் தவறுமாகாது. ஆசை, விருப்பு, அதனால் ஏற்படும் முயற்சி இல்லையேல் உலகம் ஒழுங்காக இயங்காது, வளர்ச்சியும் ஏற்படாது. சுயநலத்திலிருந்துதான் பொது நலம் உருவாகும் என்பதுவே அடிப்படை. சமூக மேம்பாடும் அதன் வளர்ச்சியென்று வரும் பொழுது சுயநலத்தின் விகிதாசாரம் மாறுபடல் வேண்டும். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க முயற்சிப்பதே நல்லறமாகும். ஒருமனிதனில் சுயநலத்தின் படிமுறைகள் குறைவடைய, அம்மனிதன் சமூக சேவகனாக மாறி விடுகின்றான்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல (குறள்- 39)
ஒற்றுமை:

இன்றைய நம் தமிழ் சமூக நிலையென்ன? அதன் தேவையென்ன? உலகின் உயர்ந்த மேம்பாடான நிலைக்கு நம் சமூகம் வளர அடுத்த கட்டமாக நாம் தனி மனிதனாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் செய்ய வேண்டியதுதான் என்ன? அதைத் தீர்மானிக்க வேண்டும். நம் இனத்திற்காக நல்வழியில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமிது. நாம் மனதார ஒவ்வொருவரும் உணர்ந்து, செயற்படத் துணிதல் வேண்டும். அதற்கு நாம் ஒன்று பட்டு மனித நேயத்துடன் செயற்பட முனைதல் வேண்டும்.

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவதென்பது இழுக்கு (குறள் - 467)

ஒற்றுமையே பலம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதனை நாம் மறந்துவிட்டோமா?. நாம் படிக்கும் காலத்திலேயே ஒற்றுமை பற்றியபால பாடமும் பல கதைகளும் உண்டு. எடுத்துக்காட்டு வேடனும் புறாவும் கதை அதுவும் நினைவுண்டா? பாடம் முடிந்ததும் வலையும் பறந்தது, நாம் படித்ததும் பறந்துவிட்டது போலும்.

தமிழன் வரலாற்றில் தமிழனை தமிழன் ஆட்சி செய்ததை விட வேற்று இனத்தவரே நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளார்கள் என்பதனைச் சரித்திரம் கூறுகிறது. தன்னரசுக் காலம் என்றிருந்த பொழுது மூவேந்தர்களும் ஆட்சி புரிந்து உள்ளார்கள். படையெடுப்புகளும் சதிகளும் சூழ்சிகளும், காட்டிக் கொடுப்புக்களும், நிலையற்ற ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின, தமிழ் மக்கள் இதனால் பல இன்னல்களுக்கு உள்ளாகியமை வரலாறு அறியும்.

இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக அமைவது ஆசையும், சுயநலம், போட்டி, பொறாமை, ஒற்றுமையின்மையுமே ஆகும். இன்றைய நம் நிலையை நறுக்கென்று காட்டுகின்ற விதமாக ஒரு கவிதை கண்டேன். கடந்த காலங்களில் நம் கண்முன் கண்ட காட்சிகளை இப்பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவதாக உணர்கின்றேன்.

காட்டுக்குள்ளே நான்கு எருதுகள் கட்டுக்கோப்பாய் இருந்ததாம்.
வேட்டையாட சிங்கம் வந்தால்
விரட்டி விரட்டி துரத்துமாம்.

மேயும்போதும் ஓய்வின்போதும்
ஒற்றுமையாய் இருக்குமாம். திசைக்கொன்றாய் தலையைவைத்து தினமும் காவல் காக்குமாம்.

ஒன்றுபட்ட எருதுகளோ சண்டைபோட்டு பிரிந்ததாம்.
சமயம் பார்த்து காத்திருந்த
சிங்கம் அடித்துக் கொன்றதாம்.

ஒன்று சேர்ந்து வாழும்போது
ஓங்கி நிற்கும் பலமன்றோ!
ஒற்றுமையே வலிமை என்று
உணர்த்தும் கதை இதுவன்றோ!

கவிஞருக்கு மிக்க நன்றி.

(யாழ் கோட்டையை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த அன்றைய காவலரண் முறையை இந்த வேளையிலே சிறிது சிந்தித்து பார்க்கிறேன் தொடர்புண்டா என்று.)

போர்:

நம் இலங்கைத்தீவில் இனப்பிரச்சனைகள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. அதன் உச்சமாகக் கடந்த 1983ம் ஆண்டிற்கு பின்னர்தான் ஆயுதப் போராட்டம் நடை பெற்று 2009 ல்தான் ஓர் ஓய்வு நிலைக்கு வந்துள்ளது எனலாம். இந்த போராட்டத்தின் விளைவாக ஓரு இலட்சத்திற்கும் மேலாக உயிர்கள் பறிக்கப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொத்துக்களும் உடமைகளும் அழிக்கப்பட்டு, கல்வி, கலை, கலாசாரம், பண்பாட்டு ஒழுங்குமுறைகளும் இப் போரின் பெறுபேறாகிச் சீரழிக்கப்பட்டது. இப்பாரிய அழிவுகளை நிவர்த்தி செய்ய பணத்தினாலோ, பதவிகளினாலோ, கட்டிடங்களினாலோ, பாதை நிர்மாணிப்புக்களாலோ, புகையிரத சேவைகளினாலோ சீர்செய்ய முடியாது. இதனை நம் சமூகத்தினது ஒட்டுமொத்த ஒற்றுமையினாலும் தளராத மனவுறுதியோடும் நிலையான கட்டுப்பாட்டுடன்தான் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

உலகப்போரின் அழிவுகளைக் கேள்விப்பட்டுள்ளோம், குறைந்தது 26 நாடுகள் பல விதமான அழிவுகளைச் சந்தித்துள்ளன. முதலாம் உலகப்போர் 1914 - 1918 ம் ஆண்டு வரையும், இரண்டாம் உலகப்போர் 1939 - 1945 ம் ஆண்டு வரையும் நடைபெற்றுள்ளன. இந்த அகோரப்போரின் வடுக்கள் இன்னும் சிலநாடுகளில் பல தாக்கங்களை ஏற்ப்படுத்திகொண்டே இருகின்றன. இப்போர்களின் காரணமாக உலகில் 60 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள் என புள்ளிவிபரம் கூறுகின்றது. இவர்களில் 40 மில்லியன் மக்கள் பொது மக்களும் குழந்தைகளுமாக இரண்டாம் உலகப் போரில் மடிந்தார்கள். 1945ம் ஆண்டு ஜப்பானின் கிரோசிமா, நாகசாக்கி நகரங்களில் அமெரிக்காவினால் முதன்முதலாக அணுகுண்டு வீசப்பட்டது. (இந்த தாக்குதல் ஆகஸ்ற் 6ம் திகதியும் 9ம் திகதியும் 1945 ம் ஆண்டு நடைபெற்றது.)

இந்த அணுகுண்டின் தாக்கம் இன்னும் நகரங்களில் மாற்று விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதனை அறிந்து வேதனையடைகின்றோம். இந்தவிதமான மனிதப் பேரவலமும் இழப்புக்களும் இவ்வுலகிற்கு இனிமேல் வரவேண்டாமென உலகுவாழ் மக்கள் விழித்துக் கொண்டு ஒற்றுமைப்பட்டதன் பயனாகவே ஐக்கிய நாடுகள் சபை உருவாகியது. இதனை முன்னாள் அமரிக்க அதிபர் Franklin D. Roosevelt அவர்களின் முன்னெடுப்புடன் அமெரிக்க நேசநாடுகளின் கூட்டுறவின் பயனாக மூன்று மாதமாக நடைபெற்ற பலகருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஒன்றுபட்ட கருத்தோடு இப்பாரிய அமைப்பு உருவாகியது. இதில் உலக சமாதானம், பாதுகாப்பு, மனித சுதந்திரம் போன்ற அடிப்படை தேவைகளின் நிமித்தம் ஐ.நா.சபை ஒக்டோபர் 24,1945 ம் ஆண்டு உருவாகி செயற்பட தொடங்கியது. இப்படி ஐக்கியப்பட்ட (ஒன்றுபட்ட) தமிழ் சமூகங்களின் சபை எப்போது உருவாகும்??? தமிழ் சமூகத் தலைவர்கள் தங்களை முதன்மைப் படுத்தாது, தமிழ் சமூகத்தை முதன்மைப் படுத்திச் செயற்பட முனைந்தால், ஈழத்தமிழரின் விடிவில் வெளிச்சத்தைக் காண்பது உறுதி. அந்நாள் எந்நாளோ? அந்தநாளே ஈழத்தமிழனுக்கு சுதந்திர நாளாகும்.

இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களை இரு பகுதியாக பார்க்கலாம். ஒன்று களத்தில் வாழ்பவர்கள், மற்றயவர்கள் புலத்தில் வாழ்பவர்கள். களத்தில் வாழும் இவர்களில் ஒருவகையினர் கடந்தகாலப் போரினால் பாதிக்கப்பட்டு உயிர்களையும், உடமைகளையும் இன்னும் பலவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்பவர்கள். இந்த நிலைமைக்கு காரணங்கள் பலதும் இருக்கலாம், அதனை ஆராய்வது பெரிய பலனை அவர்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. அவர்களது இன்றைய அத்தியாவசிய தேவை என்ன என்பதேயாகும். உணவு, உடை, உறைவிடம், அதனைத்தொடர்ந்து கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்ற இன்னபிறவுமாகும். அதனை நாம் முதலில் நிறைவேற்றி வைக்கவேண்டிய கடைப்பாடு புலம் வாழ் தமிழர்களிலேயே தங்கியுள்ளது. இதனை பல தொண்டர் ஸ்தாபனங்களும் நல்ல உள்ளம் படைத்த தனிநபர்களும் இன்றுவரையும் செய்து வருவது பாராட்டுக்குரியது. இவற்றைப் பின்பற்றி நல்லறம் செய்ய முன்வந்து நம்மவர் துயர் தீர்ப்பது பாராட்டற்குரியது.

புலத்தில் வாழ்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு விதமான செயற்பாடுகளை கொண்டவர்கள். ஒருவகையினர் நாம் வெளிநாடு வந்துவிட்டோம் இனி நமக்கொரு பயமுமில்லை என்வீடும் என் குடும்பமும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்பதைவிட வேறு எதைப்பற்றியுமே சிந்தியாதவர்களாக வாழ்கின்றார்கள். இன்னுமொரு சாரார் நம்மண், நம்மக்கள், நம்மினம் என்ற சிந்தனையோடு தங்கள் குடும்பங்களையும் கவனித்துக்கொண்டு தங்கள் சமூக நலத்தினையும் கருத்திற் கொண்டு கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் இரண்டுங்கெட்ட நிலையில் பலவிதமான குழப்பமான மனநிலையில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவர்கள். . இதற்குப் பல காரணங்களை நம்மவர்கள் கூறுவதனை காதாரக் கேட்டிருக்கின்றேன். யாரை நம்பி யார் பின்னால் போவது? நம்மவரில் ஒருசிலர் தான் தான் தலைவனாக இருக்க வேண்டும் என்று வாழ்தலைக் காண்பதனால் வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. யாரையும் நம்பமுடியவில்லை. இந்நிலை மாறுவதற்கு மக்கள் மனங்களை வென்ற தலைவர்கள் தலைமை ஏற்றல் வேண்டும். இதற்கே கூட்டுறவு அவசியமாகும்.

அடுத்து நமது ஊர்ச்சங்கங்களும் பழைய மாணவர் அமைப்புக்களும் மற்றும் இங்கு இயங்கும் தமிழர்சார் அமைப்புகளும் தங்கள் பணிகளைச் சீரும், சிறப்புமாகச் செய்வதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. தங்கள் அமைப்புசார் விடயங்களோடு பொதுவான தமிழர் விடயங்களிலும் ஒருமித்த கருத்தை எட்டிச் செயற்பட்டால் சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமையும். எடுத்துக்காட்டாக கனடிய அரசு தமிழ் சமூகத்தில் ஒருவருக்கு நியமன அமைச்சர் பதவி ஒன்றை கொடுக்க முன்வந்துள்ளது என்று எடுத்துக்கொள்வோம். அரசு சகல தமிழ் அமைப்புக்களுக்கும் தெரிவிகின்றார்கள். இப்படியான சூழ்நிலையில் சங்கங்களும் அமைப்புக்களும் ஒன்றுகூடி பொது இடத்தில் கலந்துரையாடல் ஒன்றை செய்து தரமான தகுதியான ஓர் அறிஞரை நம்சமூகத்தில் இருந்து எல்லோரது பொதுவான ஆதரவுடன் தெரிவு செய்து அவரை அவைக்கு அனுப்புதல் வேண்டும். முக்கியமாக தேர்வு செய்யப்படுபவர் சமூகசேவை மனப்பான்மை உடையவராகவும் நமது மக்களுக்கு முழு நேர சேவைகள் செய்பவராகவும் இருத்தல் அவசியமாகும். இதனை சமூகம் கருத்தில்கொண்டு முழு ஆதரவோடு தெரிவுசெய்யும் போது நமது ஒற்றுமை அங்கே மிளிர வேண்டும். நம்சமூகத்தின் தேவையும் நிவர்த்தி செய்யப்படுதல் வேண்டும்.

இதற்கும் அப்பால் களத்திலும் சரி புலத்திலும் சரி நம் இளைய சமுதாய இளைஞர்களை சகல துறைகளிலும் களம் இறக்கி அவர்களின் கைகளில், அரசியல், சட்டம், கல்வி, போருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பதவிகளின் பொறுப்பினைக் கொடுத்துவிடல்வேண்டும். அவர்களின் பின்னால் அனுபவசாலிகள் நின்று நெறிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் தனித்திறமைகள் உடையவர்களாக வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். அத்தோடு நம் மொழி கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்க ஊக்கப்படுத்த வேண்டும். எந்த நாட்டிலும், எந்த சமூகத்திலும் நாம் வாழ்ந்தாலும், சகலதுறைகளிலும் நம்மவர் பங்களிப்புக்கள் இல்லை என்ற நிலை இல்லாதிருத்தல் வேண்டும். அறிவுச்செல்வமும், பொருட்செல்வமும் நம்மிடம் வந்து குவிய வழி சமைக்க வேண்டும். இங்கும் புதிய தலைமுறைக்கான தலைமைப் பயிற்சிகள் CFLI ல் நடைபெறுகிறது. இது போன்ற தலைமைப் பயிற்சிக்கூடங்கள் இன்னும் பெருகுதல் அவசியமாகும்.

நம் தமிழ் இலக்கியங்களை நம்மவர்கள் அதிகம் படிக்க விரும்பாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பெரும்பாலானவை பாடல்களாகவும் வெண்பாக்களாகவும் உரை நடையிலும் அமைந்திருப்பதனால் எல்லோராலும் உடன் இலகுவாக விளங்கிப் படிக்க முடியாமல் இருக்கலாம். இவ்விலக்கியங்கள் இலகுவான நடையில் விளக்கத்துடன் புத்தகமாக வெளிவருமாயின் எல்லோராலும் படித்துப் பயன்பெற வாய்ப்புண்டாகும். தமிழறிஞர்கள் இதற்கு வழிவகை செய்தல் வேண்டும்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளின் மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வுகள் அவ்வப்போது நடைபெறும். இவ்வமைப்பிற்கு PISA (Program for International Students Assessment) என்று பெயர். இந்த ஆய்வில் கல்வி முறையில் உலகில் முதல் இடத்திலிருப்பது பின்லாந்து ஆகும். உங்கள் நாடு கல்வியில் எப்போதும் முன்னணியில் இருக்கின்றதே அது எவ்வாறு என்று அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் ஓர் நேர்காணலில் கேட்டபோது இப்படி கூறி உள்ளார். நாங்கள் கல்வியில் முன்னணியில் இருந்தாலும் குழந்தைகளுக்குக் கல்வியை இளமையில் இருந்தே திணிப்பதில்லை. ஏழு வயதிற்குப்பின் தான் பின்லாந்தில் ஒரு குழந்தை பள்ளிக்கூடம் செல்லத் தொடங்குகிறது. இங்கு தாய் மொழிக்கல்வியைத்தான் இளமையில் கற்பிகின்றோம். தாய் மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் எழுதப், பேசப் படிக்கச் சிந்திக்கக் கற்றுக்கொள்ளும் போதுதான் ஆங்கிலம் பிரன்ச் போன்ற பிற மொழிகளைச் சரியாக படிக்கமுடியும். இங்கு 44 மொழி பேசும் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். பிற மொழி பேசும் அக்குழந்தைகளுக்கும் அவரவர் மொழியையே முதலில் கற்பித்து ஏழுவயதின் பின்னர்தான் பின்னிஸ் ஆங்கிலம் போன்ற மொழிகளை கற்பிக்கின்றோம். தாய் மொழியை ஒரு குழந்தை 3-7 வயதுக்குள் கற்றால்தான் பிறமொழிகளையும் இலகுவாக கற்க முடியும் என்றும் அத்தோடு ஆசிரியர்களின் பயிற்சிகாலம் ஆறு வருடங்கள் என்றும், அக்கால கட்டத்தில் சகல துறைகளிலும் பயிற்சி பெற்ற பின்னரே, அவர்கள் படிப்பித்தலைத் தொடங்குகின்றார்கள் என்றும், அவர்களது பணி மற்றைய அரச உத்தியோகங்களை விட எந்த விதத்திலும் குறைவானது அல்ல என்றும் பின்லாந்து கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

நாமும் நம் குழந்தைகளுக்கு இளமையில் தாய்மொழியையும் அதன்பின்னர் உலக மொழிகளையும் கற்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து சகல துறைகளிலும் கல்வி கற்று வானுயர புகழ் பெறுதல் வேண்டும். தமிழனின் அறிவாற்றலால் அகிலமும் நம்மை நாடவேண்டும். அதனை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவனத்தில் கொண்டு செயலாற்றிட சகலதும் நம்மை வந்து சேரும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல் (குறள் - 314)

தீமை செய்தோரைத் தண்டிக்கவேண்டுமானால் இவருக்கா நாம் தீமை செய்தோம் என்று அவர் எண்னும் அளவிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இதன் கருத்து.

மொழி:

ஆதிமனிதன் முதலில் பேச அறியாத நிலையிலேயே இருந்தான். விலங்குகள் ஓசையிட்டதையும், பறவைகள் ஒலிஎழுப்பியதையும் கேட்டு அவற்றைப் போலவே தானும் ஒலிஎழுப்ப முற்பட்டான். பின்பு தான் விரும்பிய பொருளைப் பிறருக்குக் காட்டி தன் கருத்தை சைகையின் முலம் அறிவிக்கலானான். தான் சொல்ல விரும்பும் பொருள் எதிரில் இல்லாத போது அவற்றின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துகாட்டி தன் கருத்தை தெரிவித்தான். இவ்வாறு நீண்ட காலம் முயன்று தான் தன் கருத்தை தெரிவிக்கும் சொற்களைக் கண்டறிந்தான். இந்த பழங்கற்கால மக்கள் மரபினரே தொல் பழந்தமிழ் இனத்தவர் ஆவர் என தமிழக வரலாறு கூறுகின்றது. படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ திருத்தத்தின் பின், அரிய பல உலகு புகழ் தமிழ் இலக்கியங்களையும் படைத்து இன்று புதுப்பொலிவுடன் நம் தமிழ் அன்னை வீரியமாய் வீற்றிருக்கின்றாள் அரியாசனம் ஏற்று.

ஆங்கிலம் பேச வேண்டி வரும் சமயம் தவிர, தமிழருடன் பேசும் போது "தமிழை மட்டும்" பேசலாமே.. !

வாழ்க தமிழ் வளர்க நம் வையகம்.


சிவா வேலுப்பிள்ளை

பரிணாமவளர்ச்சி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
அணு குண்டு வெடிப்பு