"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடைய வழியாகும்."
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.(1888 - 1972)
அழகான நான்கு வரிகளில் தமிழரின் பெருமையை சிறப்பாக கூறியுள்ளார்.
தமிழரின் மொழி பண்பாட்டு நாகரிக விழுமியங்களை பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வின் மூலம் தமிழர்களின் முற்றுமுழுதான வரலாற்று பாரம்பரியங்களை கொண்டுவர முடியாது. இதனால் இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம் தமிழரின் வாழ்வியலின் பரம்பலையும் தமிழ் மொழியையும் எப்படி தமிழினம் வரலாற்றில் முன்னேற்றியது என்பதனை ஒரு சில ஆதாரங்களோடு எழுதுவதற்கு முனைமுனைவதே ஆகும். இதில் தமிழர் வரலாற்றுக்குறிப்புக்கள் தமிழரின் ஆட்ச்சியியல் கலை இலக்கிய பண்பாட்டு விழுமியங்கள் உணவு முறைகள் வைத்தியம் பாரம்பரிய விளயாட்டுக்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள், கால் நூற்றாண்டுகட்கு மேலான வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் அளப்பரிய பணி இவற்றையே எனது ஆய்வில் தெளிவுபடுத்தியுள்ளேன் என்பதை நினைத்து என் தமிழ் தாய்க்கு அழகு சேர்த்து மகிழ்ந்துள்ளேன்.
அறிவியலும், அகழ்வியலாராட்சிகளும் தொல்லியல் போன்ற பல்லியல்புகளும் தமிழின் தொன்மையையும் அதன் சிறப்பினையும் பற்பல நூல்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளதனை அறிகின்றோம். அதனையிட்டு நாம் தமிழரென்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றோம். வழக்கிலுள்ள தொன்மையான மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றாகும். மேற்கத்திய நாகரிகங்களில் முதன்மையானது நைல் நதி (எகிப்து) நாகரிகம் கி.மு. 4000 ஆண்டுகளாகும், தமிழர் நாகரிகம் கி.மு. 10,000 ஆண்டுகள் பழமையானது என்று பல்மொழி ஆய்வுகளின் மூலம் ஆய்ந்து அறிந்து கூறுகிறார் பல் மொழி ஆய்வாளரும் தமிழறிஞருமான மொழிஞாயிறு எனப்போற்றப்படும் ஞா.தேவநேயப் பாவணர் அவர்கள்.
தமிழர்களின் அடையாளம் முதலில் அவர்கள் பேசும் மொழியேயாகும். வாழிடத்தினாலும் அவர்களது பண்பாட்டு நடைமுறைகளினாலும், உணவு முறை, உடைகளினாலும் அறியக்கூடியதாகவுள்ளது. தமிழர்களது நாகரிகத்தினை தமிழ் இலக்கியங்களும் இதிகாசங்களும் தொன்மையான அறம்சார் நூல்களும் நிரூபிக்கின்றன. மனித நேயத்தினையும் நீதிவழுவா அறநெறிகளையும் நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் புலப்படுத்துகின்றன. தமிழ் கூறும் நல்லுலகிற்கு உலகப் பொது மறையான திருக்குறளை தந்து தமிழரின் அறவாழ்விற்கு வித்திட்டவர் திருவள்ளுவர். இது சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. இன்று உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் விவிலியத்திற்கு அடுத்ததான இடத்திலிருப்பது ஐயன் வள்ளுவன் வகுத்த தமிழ்நூலான திருக்குறளேயாகும். ஆகவே இன்று நமது அடை யாளங்களில் ஒன்றாகவுள்ளது திருக்குறளும் திருவள்ளுவரும் என்பது மிகையாகாது.
தொல்காப்பியரின் தொல்காப்பியமே 2300 ஆண்டுகட்கு முற்பட்ட முதல் தமிழ் இலக்கண நூலாகும், இதற்கு முந்திய தமிழிலக்கிய நூல்கள் குமரிக்கண்ட நீட்சியில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தில் கடல் கொண்டதால் மீட்கமுடியாமல் போனதாக அறியக்கிடக்கின்றது. சங்ககாலம் கி.மு 300 முதல் கி.பி 300 வரையிலாகும் என வரலாற்று அறிஞர்களால் அறியப்படுகின்றது. முதற்சங்கம் தென்மதுரையில் அகஸ்தியமுனிவரின் தலைமையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்தில் தொல்காப்பியரின் தலைமையிலும், கடைச்சங்கம் மதுரையில் நக்கீரனாரின் தலைமையில் பாண்டிய மன்னர்களின் அனுசரணையுடன் நடைபெற்றுள்ளது. இதில் பற்பல தமிழ் புலவர்கள் தமிழறிஞர்களின் பங்களிப்புடனும் கடந்த சங்ககாலம் வெகு சிறப்புடன் நிகழ்ந்தேறியது. அக்காலகட்டம் தமிழர்களின் பொற்காலமாக திகழ்ந்ததாக தமிழ் இலகியங்கள் மூலம் அறிகின்றோம்.
இன்று உலகில் 7.7 கோடிக்குமதிகமானோர் தமிழை பேசுகின்றனர், இவர்கள் தமிழகத்தில் பெரும்பகுதியினரும் அடுத்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ், இந்தோனேசியா, கனடா, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். இன்று தமிழர்கள் வாழாத நாடே இல்லை எனலாம், ஆனால் அவர்கட்கு என்றோர் நாடு இல்லாதது பெருங்குறையே. இக்குறை தீர தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு உயர்தல் வேண்டும்..
தமிழர்களுடைய வீரத்தையும் அதனால் பெறும் வெற்றியையும் கூறும் முதன்மை நூல் புறநாநூறாகும். தமிழர்களின் வீர விளயாட்டுக்களான மற்போர், விற்போர், சிலம்பம், போன்ற பல்வேறுபட்ட விளையாட்டுக்களை அக்கால இலக்கிய நூல்கள் சிலவற்றில் காணமுடிகின்றது. தமிழர்களது உணவு வகைமுறையினை எவ்வளவு அழகாக நம்முன்னோர் வகுத்து வைத்துள்ளார்கள், உணவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வந்தமையினால் தேகஆரோக்கியத்தோடும் உடல் வலிமையோடும் நீண்டகாலம் நோய்நொடியின்றி வாழ்ந்து வந்துள்ளமை வரலாற்றுச் சான்றுகளாக
உள்ளன. தமிழரது உணவுமுறையில் உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என அறுசுவை அமையப்பெற்றிருக்கும்.
"காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டோர் கோலின்றி நடப்பாரே" இவைதான் பண்டைத்தமிழரின் வாழ்வியல் முறையாகும்.
தொல்காப்பியத்தில் தமிழர்களின் எண்வகை உணவு குறிப்பிடப் படுகின்றது, அவையாவன நெல்,காணம், கொள்ளு, வரகு, இறுங்கு, தினை, சாமை, குரக்கன். இன்று நம்மத்தியில் சிறுதானியங்களின் பாவனைகள் நகரப்பகுதிகளில் குறைந்துவிட்டதனை காண்கின்றோம். இன்றும் நாம் நெல் அரிசிச்சோற்றையே பிரதான உணவாககொண்டுள்ளோம். முன்னோர் நெல் அரிசியை மூன்றாண்டுகளுக்கு கெடாமல் பாதுகாக்கக் கூடிய வழி முறைகளை கண்டறிந்து உள்ளனர்.
"சோறுவாக்கிய கொழுங்கஞ்சியாறு போலப்பரந்து ஒழுகி...." என பட்டினப்பாலை வருணிக்கின்றது.
"கஞ்சிக்கலைந்து அடிமையானோம்...." என்று பறையாவணம் ஒன்று கூறுகின்றது.
முன்னர் பழைய பாடல்களில் சோறு, அடிசில், அழினி, கூழ், அவிழ், நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை என வேறுசொற்களால் அழைக்கப்பட்டதனையும் காணக்கூடியதாக உள்ளது.
இயற்கை முறையில் விளைவித்த தானியங்களையே உணவாக கொண்டுள்ளது அவர்களது ஆரோக்கியமான வாழ்வியலை தெரியப்படுத்துகின்றது. இன்று பல்வகையான இரசாயண பசளை வகைகளும் பூச்சிகொல்லி மருந்துகளும் நம்மண்ணில் அறிமுகமாகிய பின்னர் நம் மண்ணும் நஞ்சாகியது. நம்மக்களும் நோய்வாய்ப்பட்டு பலவித புது வகை நோய்களால் வேதனையுறுவதனை நம்கண்முன் காணக் கூடியதாகவுள்ளது. நம் இயற்கை வேளான் விஞ்ஞானி கோவிந்தசாமி நம்மாழ்வார் அவர்களின் விழிப்புணர்வு மூலம் நம்மக்கள் இயற்கை விவசாயமுறையை பின்பற்றி வருவது பாரட்டி பின்பற்றவேண்டிய விடயமுமாகும். நம்மாழ்வாரின் இழப்பு வேதனைக்குரியது, அவர்காட்டிய வழியில் தொடர்ந்து விவசாயம் செய்து நல்லவற்றை உண்டு சுகவாழ்வு வாழ்வோமாக.
ஏறத்தாழ பத்தாயிரமாண்டுகட்கு மேலாக வாழும் இனம், நாகரிகத்தினை முதலில் அறிமுகப்படுத்திய இனமென்ற பெருமை நமக்குண்டு. நீதிவழுவா நெறி முறைகள்,அறம்செய்தல், விருந்தோம்பல் என பலவித உயரிய வாழ்வியல் பண்புகளை நாம் கொண்டிருந்தும், இன்னும் ஏன் பிறர் ஆட்ச்சியில் குடிமக்களாக வாழ்கின்றோம்? நமக்கென மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலங்கள் பொற்காலம். சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அரசர்களும் இருந்தார்கள் எல்லைகள் கடந்தும் கடாரம் வரை சென்று ஆட்சி செய்த சோழப்பேரசுகளும் இருந்ததனை சரித்திர வாயிலாக அறிகின்றோம். எப்படி இவற்றையெல்லாம் இழந்தோம்,? " உள்னின்று உடற்றுமாம் பிணி" என்பதற்கமைய நம்முள் உள்ள கிருமிகளே நம்மைக்கொல்லும் என்பதுபோல்.. நம்பிடையே உள்ள போட்டி பொறாமைகள், பணம் , பதவி ஆசைகளும் வேடங்களும், சாதிய பிரிவினைகளும் எட்டாம் படை காட்டிக்கொடுப்புக்களாலும் தான் நாம் நாடிழந்து அரசிழந்து சகலதையும் அன்று இழந்து இன்று வக்கற்று வாழ்கின்றோம். . அது மட்டுமா இன்றைய காலத்தில் ஈழப்போரிலும் அதே கதைதானே!. எப்போ நாம் திருந்தி ஒன்றுபட்டு உயர்வடைவது? ஐயன் வள்ளுவன் தந்த அறிவுரைகளை பின்பற்றுகிறோமா இல்லை ஓளவை சொன்னவற்றை செயல்படுத்துகிறோமா... "சாதியிரண்டொழிய வேறில்லை......" என்றாள்.. நம்மத்தியில் எத்தனை பேதமை.. சாதி மத பேதங்களை மறந்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற மமதயை மறந்து நாம் அனைவரும் தமிழ்தாய் பெற்றெடுத்த மக்கள் என்ற ஒரே கோட்ப்பாட்டில் வாழ முற்படுவோமானால் உலகில் தமிழினம் மாபெரும் சக்தியாக உருப்பெறும்.
ஒரு கிராமத்திற்குள்ளேயே எத்தனை சாதிய பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள் அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் அதன் பெயரால் நடைபெறும் கொலைகளும் கொள்ளைகளும் தீவைப்புக்களும் நம்மை நாகரிகமடையாத ஒரு தேசத்திற்குள் வாழும் மனநிலையை ஏற்ப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் நடந்தேறிய தீ வைப்புச்சம்பவம் மிகக் கொடூரமானது. ஓர் கிராமமே தீக்கிரையானது. காரணம் வெவ்வேறு சாதிய பிரிவில் உள்ள ஒர் காதல் ஜோடியின் கலப்புத்திருமணமாகும். (ஜூனியர் விகடன் 2013) இப்படியான மனித நாகரிகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகள் நம்மினத்திற்கான சாபக்கேடேயாகும். இங்கு மனிதன் மனிதனாக இல்லை. என்று ஒழியும் இந்த சாதிய வெறி. இத்தகைய பிரிவினை தீயிக்கு அரசியல் கட்சிகள் எண்ணை வார்க்கின்றன என செய்திகள் மூலம் அறியக்கிடக்கின்றது.
தமிழ் கட்சிகள் மற்றும் கழகத்தலைவர்களே, சாதிய அமைப்புக்களின் பொறுப்பான தலைவர்களே, தொண்டர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள் இக்கட்டுரையின் மூலம் முன் வைக்கின்றேன். சிறிது சிந்தியுங்கள், சீர்தூக்கி பாருங்கள், ஒர் நீதிபதியின் இடத்திலிருந்து இருபக்கமும் உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து நல்லதொரு கருத்தினை மனதில் திடமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழர்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒன்றுபட்டு வாழ வழி வகை செய்யுங்கள் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.
ஒருவனது பிறப்பு என்பது அவன் விரும்பி பெறுவது இல்லை. ஆண் பெண் உறவின் சேர்க்கையினால் தான், இரு கரு ஒர் உயிராகி பத்துமாதத்தின் பின்னர் உலகிற்கு உருவாக வந்துதிக்கின்றது. இங்கு வந்து பிறந்து வளர்ந்த பின்னர்தான் அவ்வுயிர்க்கு தெரியவரும் தான் எங்கு பிறந்துள்ளேன் என்று. யார் தன் தாய் தகப்பன், நாடு, மொழி, மதம் இனம் என்ன என்றெல்லாம் பின்னர் தான் தெரிய வரும். இந்த வகையில் எல்லா உயிரும் சமமே, சமூக வாழ்க்கை முறையில் தான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. எல்லா உயிர்க்கும் பிறப்பின் பின் தொடர்வது இறப்பேயாகும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால இடவெளிதான் படைப்பின் சூட்சுமம் எனப்படுவது, இந்த இடைவெளியில்தான் எத்தனை காட்சிகள் வேடங்கள் நாடகங்கள். இதில் நாமனைவரும் நடிகர்களே ! முடிவில் திரை மூடப்படும். ...இதனை பகுத்து அறிந்து புரிந்து அதற்கியைய வாழ்பவன் தான் மனிதன். இந்த இடைப்பட்ட வாழ்க்கை முறையினை எப்படி வாழவேண்டுமென நமது தமிழ் இலக்கிய நூல்கள் சிறப்புற எடுத்தியம்புகின்றன.
தமிழர் அடையாளம் என்று நாம் கூறுவது பேசுமொழியை அடிப்படையாக கொண்டுதான். ஒரு மொழி பேசப்படும் போதும் எழுத வாசிக்கப்படும் போதும்தான் அதன் வளர்ச்சி இருக்கும். நாம் தான் நம்மொழியை பேசவேண்டும், பிறர் வந்து நம்மொழியை பேசப்போவதில்லை, சில வேளைகளில் நமது தேவைகள் அவர்களுக்கு இருக்கும் போது நாம் அமைத்த மேடையில் ஏறி வணக்கம், நன்றி, என ஓரிரு வார்த்தைகள் கூறி நம் மனதில் இடம்பிடிப்பர். இதை விட வேறுபயன் அடையா. தமிழ் ஊடகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அன்றாடம் காண்கிறோம் ஆங்கிலம் கலந்த தமிழை. சொல்லாண்மை அற்ற மொழியைப்போல் பேசுவதும் எழுதுவதும் எம்மில் சிலருக்கு பழகிப்போன விடயமன்றோ. எடுத்துக்காட்டாக ஒரு சொல்லிலேயே பல சொற்களையும் பொருள்களையும் அடக்கியது. (எ+கா) "வாழ்க்கை" வா, கை, வாக்கை, வாழ், வாகை இப்படி பல சொற்களுண்டு.. அறிவியல் சார் சொற்களில்தான் சிறு குறைகள், அவைகூட இன்று புதிய சொல்லாக்கம் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. எம் செந்தமிழில் நல்ல சொற்களுக்கு ஏது பஞ்சம்?
தமிழன், தமிழனுடன், தமிழில் பேசுவதில் என்ன குறையுண்டு ? நான் வாழ்ந்து பழகுகின்ற சில இடங்களில் பார்க்கின்றேன் நூறு வீதம் தமிழனாக பிறந்தவர்கள் அவர்களுகளுக்குள்ளேயே ஆங்கிலத்தில் பேசுகின்றார்களே அது ஏன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை? . தமிழ் நீஸபாசை என்று ஆரியர்கள் ஒதுக்கியதை அறிகிறோம். அதைத்தான் இவர்களும் பின் பற்றுகிறார்களோ? நம் அடயாளம் காக்கப்ப்ட வேண்டுமெனில் நம் மொழி முதலில் ஒவ்வொரு தமிழராலும் பேச எழுதப்படவேண்டும். பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதனை தவறாக புரிந்துவிட்டார்களோ என்றும் எண்ண தோன்றுகிறது.
ஆங்கிலத்தை புறந்தள்ள முனையவில்லை, அதனை பொது மொழியாகவும் கற்கை மொழியாகவும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இது காலத்தின் தேவையும் ஆகும். ஐக்கிய நாடுகளின் பேரவைகளிலே சில நாட்டவர்கள் உயர் பதவிகளில் உள்ளவர்களே தங்கள் மொழியிலேயே தத்தம் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள், அதன் சாரம் மொழிபெயர்க்கப்பட்டு அம்மொழி புரியாதவர்கட்கு புரிய வைக்கப்படுகின்றது. இதனை நாம் சிந்திக்கவேண்டும். இந்த தமிழன் தான் ஆங்கிலத்தில் பிறர் மத்தியில் பேசாவிட்டால் சூழவுள்ள மற்றய சக தமிழர்கள் தன்னை தரக்குறைவாக எண்ணிவிடுவார்கள் என்று எண்ணுகின்றான். இது வெறும் தாழ்வு மனப்பான்மையே அன்றி வேறில்லை. பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகட்கு நற்கல்விதனை புகட்டுவதோடு, தமிழையும், ஆங்கிலத்தையும் மற்றும் தேவயான பிற மொழிகளையும் கற்பித்தால் அவர்கள் மேன்மையுறுவர்.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானின் நனி சிறந்தனவே.”
தமிழர்கள் இன்று உலகம் பூராவும் பரந்து வாழ்கின்றார்கள், அங்கெல்லாம் தமிழ் தமிழர்களால் பேசப்படும் மொழியாக அமைந்திருப்பது பெருமைக்குரிய விடயமேயாகும். அதே வேளையில் தங்கள் குழந்தைகளுக்கு வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழையும் பயிற்றுவிப்பதோடு நமது பண்பாடுகள் கலை கலாச்சாரங்களையும் போதிப்பதனையும் காணக்கூடியதாகவும் உள்ளது. இதே சூழ்நிலையில் சில பெற்றோர் தாய்மொழியாம் நம் தமிழ் மொழியை புறந்தள்ளிவிட்டு தம் பிள்ளைகட்கு மேற்கத்திய மொழிகளில் நாட்டம்கொண்டு அவற்றை புகட்டுவதனையும் மேற்கத்தைய கலாச்சாரத்தில் வாழ முனைவதனையும் அறியமுடிகின்றது, நம் தமிழ் நாட்டிலேயே இந்த நிலை தொடர்வது மிக வேதனையான விடயமகும். இந்த நிலமை மேலும் நீட்ச்சியுறா வண்ணம் பாதுகாப்பது பெற்றோர்களினதும் தமிழார்வலர்களினதும் கடமையாகும், அதேசமயம் தமிழகத்தில் அரசு இதில் தீவிரகவனமெடுத்து செயல்படவேண்டும்.
அதனைத்தொடர்ந்து நீண்டகால இடைவெளியின் பின் வட அமெரிக்காவில் கற்றறிந்த தமிழறிஞர்களாலும் தமிழார்வலர்களாலும் தமிழகத்திற்கு அப்பால் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பெற்று சிறந்த முறையில் ஒற்றுமையாக தமிழ்ப்பணியாற்றி வருகின்றது என்றால் அது மிகையாகாது. இச்சங்கம் மேன்மேலும் திறம்பட நடைபெற இங்குவாழ் தமிழ்மகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்க்கென்றோர் பண்பாடு நெறிமுறைகள் உணவு முறை உடை மற்றும் கலை கலாச்சாரமென்று பாரம்பரியமான நடைமுறைகள் பலவுண்டு. சில இடங்களில் சிற்சில மாற்றங்கள் இருப்பினும் அடிப்படையில் அவை பொதுவானதே. தமிழக மக்கள் சாதி மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு வாழ வேண்டும், கட்சிகளினதும் கழகங்களினதும் கொள்கைகளில் தமிழர்களின் ஒற்றுமைக்கான தேவை உறுதிபட வேண்டும். அப்போது தான் தமிழர்களின் அடையாளம் காக்கப்படும். நம் பண்பாடு சீர்குலையாது பேணப்படும். அதன் பின்னர் தான் பிறநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விடிவு ஏற்ப்பட வாய்ப்புண்டாகும். இப்படியான மாற்றங்கள் வருவதற்கு சுய மரியாதைக் கொள்கைகளும் பகுத்தறிவு போதனைகளும் இற்றைய நாளில் மேலும் அவசியமாகும் இதற்காகவேனும் ஈ வே ரா பெரியார்கள் போல் பலர் நம்மத்தியில் தோன்றி புதிய பாதயை காட்டவேண்டும். தமிழன் ஒன்றுபட்டு வாழ வழி பிறக்கட்டும்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் , கொள்கைகள் விருப்பு வெறுப்புக்கள் என பலவிருக்கலாம், அதில் தவறில்லை. நாம் அனைவரும் ஆசா பாசங்கள் நிறைந்த மனித பிறப்பேயன்றி வானத்திலிருந்து வந்துதித்தவர்களல்ல. பொதுவாக மனிதனுக்கு சுயநலம் இல்லாமல் இல்லை.இல்லையேல் அவன் துறவியாகி யாவற்றையும் துறந்துவிடுவான். அவனுக்கு மண்ணாங்கட்டியும் தங்கக்கட்டியும் ஒன்றாகவேயே தெரியும். கோடியில் ஒருவராவது அப்படியிருப்பாரோ? அது நிற்க., சுயநலத்திலும் ஒரு பொது நலம் வேண்டும். நாம் நம்நலத்திற்காகவே உண்கிறோம், உடுக்கின்றோம், படிக்கின்றோம் உழைக்கின்றோம் சேமிக்கின்றோம் இன்பமாய் வாழ் முயல்கின்றோம் இல்லையா? நம் நலத்திலுள்ள அக்கறை போல் பிறர் நலத்திலும் ஒரு சிறு விளுக்காடேனும் இல்லறத்தில் நல்லறமாக வாழவேண்டும். நம்முன்னோர் வாழ்ந்து காட்டியதனை இலக்கியங்களி லும் காண்கிறோம்.
"அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த புகழும் இல." (திருக்குறள் 39)
நாம் ஏதோ ஒரு அமைப்பிலோ, சங்கத்திலோ, கட்சியிலோ, கழகத்திலோ இயக்கத்திலோ ஒர் அங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். இவைகளது கொள்கைகள் கருத்துக்கள் நோக்கங்கள் கட்டமைப்புக்கள் வேறுபடலாம், ஆனால் இவற்றிற்கெல்லாம் பொதுவான சில விடயங்களும் அமைந்திருக்கும். அதாவது தமிழ், தமிழர், நம்பிரதேசம், மாநிலம் என்ற சில கருப்பொருளுக்குள்ளே பொதுவான கருத்தும் இருக்கும்.
இத் தருணங்களில் நாம் தனிதனியாக செயல்படாமல் ஒருமித்து செயல் பட்டால் விரைவாக நம் குறிக்கோளை எட்ட முடியும். எடுத்துக்காட்டாக ஈழத்தமிழர் பிரச்சனையில். அங்கு வாழ் மக்களுக்கான நல்வாழ்வு அமைய முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு சகல அமைப்புக்களும் தனித்தனியாக இயங்காமல், எல்லாகட்சிகளும், அமைப்புக்களும், ஒன்றுபட்டு செயற்படும் பட்சத்தில் பாரிய அழுத்ததையும் நம் ஒற்றுமையையும் அன்னாட்டு அரசுக்கு காட்டமுட்டியும்.( எ+கா ) முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டதனையும் கேரள மாநில கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டதனையும் நாம் பாடமாக எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" ( நம் பழ மொழி ).
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்? (பாரத தேசம்- பாரதியார்)
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை பெரு விழா இதற்கோர் எடுத்துக்காட்டாகும். வட அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் அமையப்பெற்ற தமிழ்ச் சங்கங்களும் கனடிய தமிழ்ச்சங்கங்களும் தமிழின் பால் உள்ள அன்பால் ஒன்று சேர்ந்து தொடர்ந்து தமிழ்ச்சங்க பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்தி வருவது தமிழ்சங்கங்களின் ஒற்றுமையின் வெற்றியேயாகும். இருபத்தியேழாவது வருட தமிழ்ச்சங்க பெருவிழாவும் சிறப்புற நடைபெற வாழ்த்துவோமாக!.
இதே போல் ஏணைய தமிழ்ச்சங்கங்களும் அமைப்புக்களும் இத்தாய்ச்சங்கத்தில் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பெருவிழா வானுயர வளர வேண்டும். தமிழர் அடையாளம் காக்கப்பட வேண்டும், தமிழன் தமிழனுடன் தமிழில் பேசவேண்டும், ஒன்றுபட்ட தமிழராய் உயர்ந்து நிமிரல் வேண்டும். இந்த உலகம் நம்மை பார்த்து வியக்கவேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க நம் வையகம்!
தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்....!!
எழுதியவர்: சிவம் வேலுப்பிள்ளை (சிவா வேலுப்பிள்ளை)
பிறம்ரன், ஒன்ராறியோ, கனடா. (Brampton, Ontario, Canada)